×

தா.பழூர் அருகே கவனக்குறைவால் காலை இழந்த சிறுவனின் தந்தைக்கு தலையில் ரத்த குழாயில் அடைப்பு

தா.பழூர், நவ.22: தா.பழூர் அருகே கவனக்குறைவால் காலை இழந்த சிறுவனின் தந்தைக்கு தலையில் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவ உதவிக்கரம் கேட்டு போராடி வருகிறார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பூவந்திகொள்ளை கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி- இளஞ்சியம் தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள். ரூபன், ரோஹித் என்ற பெயர் கொண்ட இருவரும் அதே ஊரில் உள்ள துவக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் ரூபன் தெருவில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்தார். அப்போது காலில் வலி ஏற்பட்டதால் கை கால்களில் எண்ணெய் மற்றும் தைலங்களை தடவி பாட்டி வைத்தியம் பார்த்துள்ளனர். மேலும் சிறுவன் ரூபன் வலி தாங்க முடியாமல் கதறி அழ அப்பகுதியில் உள்ள மருத்துவர்களை அணுகியுள்ளனர். அவர்களும் ஊசி போட்டு மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

நாளடைவில் கால்கள் வீங்கியதால் அலறிய சிறுவனை மீண்டும் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் 3 மாதம் கடந்த அந்த சிறுவனுக்கு மீண்டும் கால் வலித்ததாால் வேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபோது ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து ஸ்கேன் எடுத்ததில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. செய்வதறியாது திகைத்த பெற்றோர்கள் சுற்றி இருந்தவர்களின் ஆலோசனையில் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது வலதுகால் எடுக்கப்பட்டது.பெற்றோர்களில் அலட்சியத்தாலும் மருத்துவர்களின் கவனக்குறைவாலும் சிறுவயதிலேயே தனது வாழ்க்கையை தொலைத்து நிற்கும் சிறுவன் மற்றவர்கள் விளையாடுவதை வீட்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்து வருவது மன வேதனையாக இருப்பதாக அப்பகுதியில் உள்ளவர்களும் சிறுவனின் பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.

இதுவரை அச்சிறுவனுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரை மருத்துவ செலவுகள் செய்து வந்ததாகவும், அச்சிறுவனின் தந்தை ராஜீவ் காந்திக்கு தலையில் ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டு அவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தங்களால் இதற்கு மேல் செலவு செய்து மருத்துவம் பார்க்க போதிய வசதிகள் இல்லை என்று ராஜீவ் காந்தி மருத்துவ உதவிக்கரம் தேடி வருகிறார்.சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் உடல் வலி ஏற்பட்டது என்று கூறினால் பெற்றோர்கள் அலட்சியம் பார்க்காமல் உடனே மருத்துவர்களை அணுகி சரியான முறையில் தீர்வு காண வேண்டும். தொடர்ந்து வழி இருப்பின் ஸ்கேன் செய்து குழந்தைகளுக்கான தீர்வு உடனே நிவர்த்தி செய்ய வேண்டும் இல்லையேல் இதுபோல் பெற்றோரின் அஜாக்கிரதையாலும் கவனக்குறைவாலும் குழந்தைகள் கை கால்களை இழந்து பரிதவிக்க பெற்றோர்களே காரணமாகி விடக்கூடாது.

Tags : Pallur ,
× RELATED பள்ளூர் வாராஹி